தமிழக செய்திகள்

சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது: போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ரோந்து கார் மற்றும் நவீன மோட்டார் சைக்கிள்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் 420 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு 20 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ரோந்து கார் செயல்பாடு- போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்

சென்னை போக்குவரத்து போலீசாருக்கு தனியார் நிறுவனம் சார்பில் 50 நவீன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ரோந்து கார் வழங்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கொடியசைத்து மோட்டார் சைக்கிள்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் கபில்குமார் சி.சரத்கர், சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது:

சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாட்டை மேம்படுத்த இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் இவற்றைப் பயன்படுத்துவார்கள். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் 420 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 20 உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 2,997 பேர் காயமடைந்த நிலையில், இந்த ஆண்டு 2,805 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாததற்காக 4.85 லட்சம் வழக்குகள் பதிவு

ஹெல்மெட் அணியாததற்காக இந்த ஆண்டு இதுவரை 4.85 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விபத்துகள் இல்லாத சென்னையை உருவாக்குவதே போக்குவரத்து போலீசாரின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT