சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந் தேதி வரையில் (இன்று முதல் 6 நாட்களுக்கு) கன முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதுதவிர வருகிற 23-ந்தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று அதிகாலையில் நேரில் ஆய்வு செய்தார். வீனஸ் நகர் நீர் இறைக்கும் அறை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர், மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், மழைநீர் தேங்கத் தொடங்கிய உடனேயே வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அங்காளம்மன் கோவில் தெரு, டெமலஸ் சாலை, டானா தெரு ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் மற்றும் நீர் வெளியேற்றும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.