சென்னை,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கிடையில், வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்களின் விவரம் அடங்கிய படிவம் 17ஏ உள்ளிட்ட தேர்தல் ஆவணங்களை ஆய்வு செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில், 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் எந்த ஒரு வாக்குச்சாவடிக்கும் மறுதேர்தல் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரி லட்சுமணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருப்பத்தூர் தொகுதியுடன் ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால் பட்டி, வைரவன்பட்டி, விடத்தலான்பட்டி ஆகிய 6 கிராமங்கள் சேர்க்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 83.89 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை விட 6 சதவீதம் அதிகரித்து உள்ளது.