தமிழக செய்திகள்

சென்னையில் தூய்மை பணிகள் தீவிரம்: ஒரே நாளில் 78 டன் கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் சிறப்பு தீவிரத் தூய்மைப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணியில் ஒரே நாளில் 78 டன் கழிவுகள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூய்மை பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், இன்று 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் (TNUHDB) சிறப்பு தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சிறப்பு தீவிரத் தூய்மைப் பணியின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் (TNUHDB) மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பின்வரும் தூய்மைப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டது:

1. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் (C&D Waste) முழுமையாக அகற்றப்பட்டன.

2. அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.

3. குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்திருந்த புற்கள், களைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

4. குடியிருப்புப் பகுதிகளில் இருந்த பயன்பாடற்ற பொருட்கள் மற்றும் தேவையற்ற கழிவுகள் அகற்றப்பட்டன.

5. பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

6. குடியிருப்புக் கட்டிடங்களுக்கு இடையிலான காலியிடங்கள் (In-between Blocks) மற்றும் கட்டிடங்களைச் சுற்றியுள்ள காலியிடப் பகுதிகளில் (Setback Areas) தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன.

சிறப்பு தீவிரத் தூய்மைப் பணிகள்

இச்சிறப்பு தீவிர தூய்மைப் பணியின் போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் இருந்து 51 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் 27 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் என மொத்தம் 78 மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

இச்சிறப்பு தீவிர தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து 15 மண்டலங்களிலும் மொத்தம் 1,142 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 225 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து தூய்மையைப் பராமரிக்கும் வகையில், இதுபோன்ற சிறப்பு தீவிரத் தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதுடன், வழக்கமான தூய்மைப் பணிகளும் மேலும் வலுப்படுத்தப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்கவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்புப் பணியாளர்களிடம் குப்பைகளை முறையாக ஒப்படைக்கவும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT