சென்னை,
சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 48). கூலித்தொழிலாளியான இவர், தனது மனைவி மற்றும் மகள்களுடன் வாழ்ந்து வந்தார். ராஜேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ராஜேஷ் மது குடித்துள்ளார். அவர் இரவு, தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
போதையில் எழுந்த ராஜேஷ், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே அவர் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ராஜேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைபார்த்த அங்கிருந்தவர்கள், அருகில் இருந்த சாக்கு பையினை கொண்டு ராஜேசை டிரான்ஸ்பார்மரில் இருந்து தள்ளிவிட்டனர். பின்னர் ஆட்டோ மூலம் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழ்ந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி அண்ணாசாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.