சென்னை
சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த இளம்பெண் பாரை விட்டு வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, பாரில் இருந்த ஒரு கும்பல் காரை எடுத்து கொண்டு, அவரை பின்னால் துரத்தியுள்ளது.
இதில், அந்த இளம்பெண் சென்ற வாகனம் மீது காரை கொண்டு அந்த கும்பல் மோதி உள்ளது. இந்த விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற சிறுமி படுகாயமடைந்து உள்ளார். விபத்து ஏற்படுத்தி விட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் மரணமடைந்த அந்த இளம்பெண் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. காரை கொண்டு மோதி விபத்து ஏற்படுத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.