சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மார்ச் மாதம் 4-ந் தேதி, முதல் தலித் பெண் மேயராக பதவி ஏற்றவர், பிரியா ராஜன். இவருடன் திமுக கவுன்சிலர்களாக பதவி ஏற்றவர்களில் பலர், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள். இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு காலமே இருப்பதால், 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைமையிடம் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ள இவர்கள், சென்னையை சேர்ந்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குறிப்பாக, மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். மேயர் பிரியா திரு.வி.க. நகர் தொகுதியிலும், துணை மேயர் மகேஷ்குமார் வேளச்சேரி தொகுதியிலும் போட்டிட வாய்ப்பு கேட்கிறார்கள்.
திரு.வி.க. நகர் தொகுதியில், தற்போது திமுகவை சேர்ந்த தாயகம் கவி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்றாலும், தனித் தொகுதி என்பதால் திரு.வி.க. நகர் தொகுதியில் கடந்த 2 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால், இந்த முறை திரு.வி.க.நகர் தொகுதி சென்னை மேயர் பிரியாவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. கட்சித் தலைமை இதற்கு பச்சை கொடி காட்டிவிட்டதாகவும், மேயர் பிரியாவும் திரு.வி.க.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், இந்த முறை சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 5 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.