தமிழக செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

கூடுதல் ரெயில் சேவைகள் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் கூடுதல் ரெயில் சேவைகளை இயக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேவை நேரம் நீட்டிப்பு

இதன்படி சென்னை மெட்ரோவின் பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய 3 வழித்தடத்தடங்களில் Peak-hour சேவை இன்று(5-ந்தேதி) இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நாளை(6-ந்தேதி) Peak-hour சேவை, மாலை 5 மணிக்கு பதிலாக 4 மணிக்கே தொடங்கி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடைசி ரெயில்கள்

நாளைய தினம் முனைய நிலையங்களில்(Terminals) இருந்து கடைசி ரெயில்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் இரவு 11 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12 மணி வரையும், மஞ்சள் வழித்தடத்தில் இரவு 9 மணிக்கு பதிலாக, இரவு 11 மணி வரையும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு மட்டுமே...

இந்த கூடுதல் ரெயில் சேவைகள் நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பான, வசதியான மற்றும் சிரமம் இல்லாத பண்டிகைக்கால பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT