தமிழக செய்திகள்

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் சென்னை மெட்ரோவின் புதிய முயற்சி!

மெட்ரோ கதவில் ஆடைகள் சிக்கினால் தானாகவே நிறுத்தப்பட்டு, கதவு திறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

சென்னை,

சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக “இழுபடுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature)தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மேலும், ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் “இழுபடுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature - பயணிகளின் மெல்லிய உடமைகள் கதவுகளில்சிக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும்) பொருத்தப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் பயணிகளின் பயன்பாட்டிற்காக நேற்று (16.05.2026) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), மனோஜ் கோயல் இந்த மெட்ரோ ரெயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்,சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ். ராமசுப்பு (மின்னியல்), தலைமைஆலோசகர் கோபிநாத் மல்யா (இயக்கம் மற்றும் பராமரிப்பு), தலைமை பொது மேலாளர் ஏ. ஆர். ராஜேந்திரன் (மெட்ரோ ரெயில்), பொது மேலாளர் எஸ். சதீஷ் பிரபு (இயக்கம் மற்றும் பராமரிப்பு),கூடுதல் பொது மேலாளர் சி. பாலமுருகன் (மெட்ரோ ரெயில்), ஒப்பந்ததாரர்களின் உயர் அலுவலர்கள், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்களின் மற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1-ல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில், தானியங்கிகதவுகள் மூடும்போது ஏதேனும் பொருள்கள் சிக்கிக்கொண்டால் அதைத் தானாகவே கண்டறியும் தொழில்நுட்பம் (Obstacle Detection) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது, அதனுடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக “இழுபடுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature) என்ற புதிய பாதுகாப்பு அம்சம் இந்த கதவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியச் சூழலுக்கு ஏற்ப இந்த அம்சம்பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புடவை, துப்பட்டா, பை பட்டை போன்ற மெல்லிய பொருட்கள், சில நேரங்களில் மெட்ரோ ரெயில் கதவுகள் மூடும்போது எதிர்பாராதவிதமாக கதவுகளின் இடையில்சிக்கினால், இந்த புதிய தொழில்நுட்பம் அதை உடனே கண்டறிந்து பயணிகளுக்கு ஆபத்து ஏதும்ஏற்படாமல் பாதுகாக்கும்.

இந்த அதிநவீன பாதுகாப்பு அமைப்பு, மெட்ரோ ரெயில் கதவுகளுக்கு இடையே ஏதேனும் மெல்லிய ஆடைகளோ அல்லது பொருட்களோ மாட்டிக்கொண்டால், அது எந்த திசையில் இழுக்கப்பட்டாலும் அதை உடனடியாகக் கண்டறிந்துவிடும். உடனடியாக, மெட்ரோ ரெயிலின் பிரேக்குகள் தானாகவே இயக்கப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுத்தப்படும்; மாட்டிக்கொண்ட பொருளை வெளியே எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட கதவுதிறக்கப்பட்டு கதவில் சிக்கிய பொருள் எடுக்கப்பட்ட பிறகு, மெட்ரோ ரெயில் சேவை எவ்விதத் தடங்கலும் இன்றி வழக்கம் போல் இயங்கும்.

சென்னை மெட்ரோ ரெயிலில் “இழுபடுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature) எனப்படும்பாதுகாப்பு அம்சம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மெட்ரோ ரெயில் வரலாற்றிலேயே இந்த அதிநவீனப் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும், மிக அண்மைக்கால சர்வதேசத் தரம் மற்றும் தொழில்நுட்ப விதிகளின்படி (EN 14752:2025), உலகிலேயே முதல் முறையாக இந்த அம்சம் சென்னை மெட்ரோ ரெயிலில் தான் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. சென்னை மெட்ரோவிற்காக இந்த சிறப்பான பாதுகாப்பு வசதியை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஓசூரைச் சேர்ந்த Faiveley Transport Rail Technologies India Pvt Ltd மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Alstom Transport India Limited ஆகிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த வசதிகளுடன் கூடிய முதல் மெட்ரோ ரெயில் வெற்றிகரமாகத் தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-1-ல் இயக்கப்பட்டு வரும் மீதமுள்ள 51 மெட்ரோ ரெயில்களிலும் “இழுபடுதலைத் தடுக்கும் வசதி” (Anti-Drag Feature) பாதுகாப்பு அம்சத்தைக்கொண்டுவரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பயணிகளின் பாதுகாப்புத் தரத்தை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும், அனைவருக்கும்குறிப்பாக பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்குவதிலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.