சென்னை,
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னை ராமாபுரம் – மணப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அங்காடியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் இருப்பு நிலை, தரம், முறையான பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விநியோக நடைமுறைகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அங்காடியின் சுத்தம், பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா, பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என்பதும் பார்வையிடப்பட்டது.
பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் உரிய எடையிலும், தரமாகவும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொருட்கள் வழங்கும்போது விற்பனை ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி, பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் அங்காடியின் பணியாளர்கள் உடனிருந்தனர்.