தமிழக செய்திகள்

சென்னை: தொழிலாளர் நலன் குறித்த பயிற்சி கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்

தொழிலாளர் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.

சென்னை,

இன்று சென்னையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், “சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்” குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

ஒரு நாள் பயிற்சி

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது அமைச்சர், முதல்வர் சார்பாக மியாமோட்டோ மிச்சிகோ, பல்லவி மான்சிங், அரசு அலுவலர்கள் மற்றும் இப்பயிற்சியின் பங்கேற்பாளர்களை நான் உளமார வரவேற்கிறேன் என்றும், நான் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக உங்கள் முன்னிலையில் நின்று, இந்த ஒரு நாள் பயிற்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வெற்றி தமிழகத்தினை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், தொழிலாளர் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றும், மேலும் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களை உளமார வரவேற்கிறேன் என்றும் இன்று தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை உருவாக்கும் ஒவ்வொரு தொழிலாளரின் கண்ணியம் மற்றும் கடின உழைப்பின் குரலாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசினார்கள் .

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் முனைவர் மா.வள்ளலார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் திரு. செ.ஆனந்த், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் மியாமோட்டோ மிச்சிக்கோ, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பல்லவி மான்சிங், முதுநிலை நிகழ்ச்சி அலுவலர், திவ்யா வர்மா, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் செந்தில் குமாரி, இணை இயக்குநர்கள் சுப்ரமணியன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மனிதவள துறை வல்லுநர்கள், நலப்பணி அதிகாரிகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக மின்னணுவியல் உற்பத்தித் துறைகள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் பங்குபெற்றனர்.