தமிழக செய்திகள்

சென்னை: ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

புதிய பாலத்திற்கு அருகில் ரூ.1.10 கோடியில் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.02.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் 96.04 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். மேலும், கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் ரெயில்வே 2ஏ சந்திக்கடவில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மேம்பாலம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்திற்கு அருகில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பூங்கா ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தல்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே 2பி மற்றும் 2ஏ சந்திக்கடவுகளில் தொடர் இடைவெளிகளில் ரெயில் போக்குவரத்துக்கு ஏதுவாக சுமார் 42 ஆயிரம் வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இவ்விரு சந்திக்கடவுகளையும் கனரக வாகனங்களும் பொதுமக்களும் கடப்பதற்கு காலதாமதமாகிறது.

இதன் காரணமாக இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றி, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், காலநேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2பி ரெயில்வே சந்திக்கடவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 96.04 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார்.

இம்மேம்பாலத்தின் நீளம் 840 மீட்டர் (ரெயில்வே பகுதி நீளம் 72 மீட்டர் உட்பட), அகலம் 8.40 மீட்டர் மற்றும் மேம்பாலத்தின் இரு மருங்கிலும் சேவை சாலையின் (Service Road) அகலம் 5 மீட்டர் ஆகும். இப்பாலத்தினால் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எழில் நகர், கண்ணதாசன் நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் மக்கள் பயனடைவர்.

எண்ணூர் நெடுஞ்சாலையில் சந்திக்கடவு எண்.2Aல் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் ரெயில்வே 2A சந்திக்கடவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்த மேம்பாலம் 448 மீட்டர் நீளம் (ரெயில்வே பகுதி நீளம் 39.40 மீ. உட்பட), 11 மீட்டர் அகலம் மற்றும் 5 மீட்டர் அகலமுள்ள நடைபாதையுடன் கூடிய சேவை சாலைகளுடன் (Service Roads) அமைக்கப்படவுள்ளது. இம்மேம்பாலம் பவர் ஹவுஸ் சந்திப்புக்குப் பிறகு சுமார் 30 மீட்டர் தொலைவில் தொடங்கி IOCL சந்திப்பில் முடிவடைகிறது. இப்பாலப் பணிகள் முடிவுறும் நிலையில் இப்பகுதிகளைச் சார்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல்

தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்திற்கு அருகில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பூங்காவிற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்த பூங்காவானது, 19,128 சதுர அடி பரப்பளவு கொண்டது. இப்பூங்காவில் பசுமைத் தாவரங்கள், சுற்றிலும் நடை பயிற்சிக்காண பாதை, அமரும் இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர், எபிநேசர், ஆர். மூர்த்தி, துணை மேயர் மு. மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.