சென்னை,
நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மா. ஆர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படும் சுய உதவிக் குழுவினர் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சியினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மா. ஆர்த்தி ஆகியோர் இன்று (01.10.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.42 கோடி வங்கிக் கடன் இணைப்பும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களுக்கு மூன்று லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயும் தனிநபர் கடனாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.