தமிழக செய்திகள்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: கண்காணிப்பு அலுவலர்களுடன் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை,

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மீட்பு நடவடிக்கை

தமிழ்நாடு முதல்-அமைச்சர், சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலரர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆலோசனைக்கூட்டம்

இதனைத் தொடர்ந்து, இன்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, இரயில்வே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, காவல் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பேசும்போது தெரிவித்ததாவது:-

நடவடிக்கை

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக்கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டு பணிகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மோட்டார் பம்புகள்

ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் இணைப்பு இல்லாத பகுதிகளில் இணைப்பினை உருவாக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கால்வாய்கள் மற்றும் ஆறுகள் சேரும் இடங்களிலும், முகத்துவாரத்திலும் மழை வெள்ளம் நீர் தங்குதடையின்றி செல்கின்ற வகையில் அடைப்பினை நீக்கிட வேண்டும்.

முன்னெச்சரிக்கை பணிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகாலில் தூர்வாருதல், வார்டு வாரியாக முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளுதல், சாலை சீரமைப்புப் பணிகள், தேவையான மோட்டார் பம்புகள், மோட்டார் பம்புகள் பழுது பார்த்தல், மழைக்கால பணிக்காக வார்டு ஒன்றிற்கு 5 பணியாளர்கள் வீதம் 1000 பணியாளர்கள் நியமித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

215 வெள்ள நிவாரண மையங்கள்

சென்னை மாநகராட்சியில் 36 படகுகளும், மீனவளத்துறையின் சார்பில் மினவர்களிடமிருந்து 275 படகுகளும் இதனை இயக்குவதற்கான நபர்கள் தயார் நிலையில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, 215 வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் 111 சமையல் கூடங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகளை மேற்கொண்டு ஆயத்த நிலையில் வைத்திட வேண்டும்.

வண்டல்கள் அகற்றும் பணி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1671 கீ.மி. நீளத்தில் மழைநீர் வடிகாலில் இருந்து வண்டல்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 1,10,082 வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மழைநீர் சீராக செல்லும் வகையில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தயார் நிலை

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள், இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், மர அறுவை இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்ட 207 பகுதிகளில் 117 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன. 20 இடங்களில் நீர் தேக்கத்தொட்டி அமைத்து, நீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. 48 இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள பகுதிகளில் இதர நடவடிக்கைகள் மூலம் மழைநீரை வெளியேற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள் பதிவு செயலி

சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் 1000த்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 721 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், செப்டம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செயலி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதில் பதிவு செய்யும் தன்னார்வலர்கள் மழைக்காலவ நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

1913 தொலைபேசி

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் 1913 தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக வரப்பெறும் புகார்களின் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

36 டீசல் ஜெனரேட்டர்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 115 எண்ணிக்கையிலான விடுப்பட்ட இணைப்புகள் உள்ளன. இதில் 42 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு மழைக்காலத்திற்கு முன்பு முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிடும் வகையில் பம்ப் அறைகளில் ஏற்கனவே 132 பம்புகளும் 36 டீசல் ஜெனரேட்டர்களும் உள்ளன.

ரெயில்வே மதகுகள்

சென்னை மாநகராட்சியில் 28 எண்ணிக்கையிலான ரெயில்வே மதகுகள் உள்ளன. இதில் 3 ரெயில்வே மதகுகளில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து, மீதமுள்ள ரெயில்வே மதகுகளில் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும். மேலும், இப்பணிகளை கண்காணிப்பதற்காக இரயில்வே துறையின் சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு இதுவரை 50625 எண்ணிக்கையிலான மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளது.

மின் கசிவு

நீர்வளத்துறை சார்பில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மின் சாரத் துறையில் மின் இணைப்புபெட்டிகளை தரையில் இருந்து உயர்த்தி வைப்பதோடு, மின்சார கேபிள்கள் வெளியில் தெரியாத வகையிலும், மின்கசிவு இல்லாமலும் தரையின் அடியில் செல்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின் கசிவு காரணமாக எந்த ஒரு உயிர் இழப்பும் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும்.

செப்டம்பர் மாதம்

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை அலுவலர்கள் கண்காணித்து விரைந்து மேற்கொள்ள வேண்டும். நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரெயில்வே துறை உள்ளிட்ட சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள்

வ.எண் மண்டலம் கண்காணிப்பு அலுவலர்களின் பெயர்

1. திருவொற்றியூர் கே.பாலசுப்பிரமணியம், இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை

2. மணலி பி.குமரவேல் பாண்டியன், உறுப்பினர்/செயலர், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு

3. மாதவரம் எஸ்.அருண்ராஜ், கூடுதல் இயக்குநர், சர்க்கரை இயக்ககம்

4. தண்டையார்பேட்டைஆர்.கண்ணன், சர்க்கரைத் துறை ஆணையர்

5. இராயபுரம் ஆஷா அஜித், இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்

6. திரு.வி.க. நகர் பி.கணேசன், மேலாண்மை இயக்குநர், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம்

7. அம்பத்தூர் கே.விவேகானந்தன், அரசு சிறப்புச் செயலாளர், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை

8. அண்ணாநகர் பி.காயத்ரி கிருஷ்ணன், இயக்குநர், சமூக பாதுகாப்பு திட்டங்கள்

9. தேனாம்பேட்டை டி.கிறிஸ்துராஜ், இயக்குநர், நில அளவை மற்றும் நில வரித் திட்டம்

10. கோடம்பாக்கம் எஸ்.கோபால சுந்தர ராஜ், கூடுதல் ஆணையர், நில நிர்வாக ஆணையரகம்

11. வளசரவாக்கம் ஜெ.விஜய ராணி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை

12. ஆலந்தூர் வாகே சங்கேத் பல்வந்த், நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்

13. அடையாறுகே.செந்தில் ராஜ், இயக்குநர் ஆதி திராவிடர் நலன்

14. பெருங்குடி மகேஷ்வரி ரவிகுமார், கலை பண்பாட்டுத் துறைத்துறை இயக்குநர்

15. சோழிங்கநல்லூர் டி.பாஸ்கர பாண்டியன், அருங்காட்சியக இயக்குநர்