சென்னை,
ரூ.34 ஆயிரம் கோடி தேவன் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் கடன் மோசடி வழக்கை, தீவிர மோசடி புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அரசியல்வாதியும், தொழில் அதிபருமான ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவருக்கு சாதகமாக செயல்பட சென்னையில் உள்ள தீவிர மோசடி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வரும் வருமானவரி அதிகாரி ஹரிஷ்குமார் தன்வர், டெல்லியைச் சேர்ந்த வக்கீல் பாரத் சர்மா ஆகியோர் அந்த அரசியல்வாதியிடம் ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல்வாதி, சி.பி.ஐ.யில் புகார் அளித்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, ஹரிஷ்குமார் தன்வருக்காக வக்கீல் பாரத் சர்மா, அவருடைய உறவினர் ஆர்யன் சர்மா ஆகியோரிடம் ரூ.1 கோடி லஞ்சத்தின் ஒரு பகுதியாக ரூ.20 லட்சத்தை அரசியல்வாதி அளித்தார்.
அப்போது, பாரத் சர்மாவையும், ஆர்யன் சர்மாவையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், வருமானவரி அதிகாரி ஹரிஷ்குமார் தன்வரையும் கைது செய்தனர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.