சென்னை,
சென்னை எழும்பூரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய் (30 வயது). தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா (28 வயது). இவர் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்யா, வீட்டின் ஒரு அறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று, சத்யாவை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சத்யா, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலர் சத்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.