சென்னை,
கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம்கள் தொடங்கப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 1,72,436 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திடும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவை கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மைக்ரோசிப் பொருத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்ட பின்னர், நாய்கள் மீண்டும் அவை பிடிக்கப்பட்ட அதே இடத்திலேயே விடுவிக்கப்படுகின்றன.
இப்பணிக்காக 40 நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் 164 நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் 200 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் நோயுற்ற நாய்களை மீட்கும் 15 வாகனங்கள் மற்றும் 3 வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு – I & II, திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர் திடல், பெருங்குடி, நந்தம்பாக்கம், மடிப்பாக்கம் மற்றும் அத்திப்பட்டு ஆகிய 14 இடங்களில் நாய் இனக்கட்டுபாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சோழிங்கநல்லூர் மண்டலம், அக்கரை பகுதியில் மேலும் ஒரு நாய் இனக்கட்டுபாட்டு மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை 41,546 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற சென்னை மாநகராட்சி விதிகளின்படி இதுவரை 1,15,548 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, இவற்றில் 78,328 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் செல்லப்பிராணிகள் அதன் உரிமையாளர்களால் கைவிடப்படுவதை தடுப்பதற்கும் மற்றும் அவற்றிற்கு ஆண்டுதோறும் ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும் முடியும். மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சியில் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்துதல் மற்றும் செல்லப்பிராணிகளின் வளர்ப்பினை முறைப்படுத்துதல் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஒரு சிறப்புத் திட்டமாக, வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொது மக்களை காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிடவும், அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம்கள் (Mass Anti Rabies Vaccination and Endectoparasiticidal camp) 11.08.2026 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 1,72,436 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் “வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை” (Rabies Free Chennai) என்ற இலக்கை அடைவதற்கான தீவிர பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.