தமிழக செய்திகள்

மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு: பிரபல ரவுடி வெட்டிக்கொலை

தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை,

சென்னை காசிமேட்டில் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ரவுடி

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் தீபக் (28 வயது). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், இவர் 'சி' பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். நேற்று மாலை தீபக் தனது நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தார். மதுபோதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதமாகி தகராறு ஏற்பட்டது.

கொலை

இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்கின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியாக சென்ற மீனவர்கள், தீபக் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வழக்குப்பதிவு

உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீபக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT