தமிழக செய்திகள்

சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிப்பு

தூய்மையான, பசுமையான சென்னையை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் பெருமளவு திடக்கழிவுகள் உருவாக்குபவர்கள் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமானக் கழிவுகள் என முறையாக தரம்பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். 01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றாத பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர், தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகள் என தரம் பிரித்து பெற்று அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி முழுவதும் அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று (24.07.2026) சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அண்ணாநகர் மண்டலம், வார்டு - 100, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குஷால் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk Waste Generators – BWGs) திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ பின்பற்றுகின்றனரா என்பது குறித்து திடீர் களஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆகியவற்றின் இணையதளங்களில் கட்டாயப் பதிவை மேற்கொண்டுள்ளனரா, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரிக்கப்படுகிறதா, பச்சை, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு வண்ணக் குறியீட்டு குப்பைத் தொட்டிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் (Composting) அல்லது உயிரி எரிவாயு (Bio-Gas) நிலையங்கள் மூலம் பதப்படுத்தும் வசதிகள் செயல்படுகிறதா, மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் கழிவுகள் முறையாக சேமிக்கப்படுகிறதா, வளாகத்தின் தூய்மை மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.

பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களில் உருவாகும் கழிவுகளை கட்டாயமாக நான்கு பிரிவுகளாக உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்து, மக்கும் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கும் நிலையங்கள் அல்லது உயிரி எரிவாயு நிலையங்கள் மூலம் பதப்படுத்த வேண்டும் என்றும், திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, அறிவியல் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆணையர் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது, அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் ஆணையர் கலந்துரையாடி, கழிவுகள் உருவாகும் இடத்திலேயே முறையாக தரம் பிரித்தல் மற்றும் வளாகத்திலேயே கழிவு மேலாண்மை மேற்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களது வளாகங்களிலேயே திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது, மாநகராட்சி கழிவு போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் மையங்களின் சுமையை குறைப்பதுடன், வள மீட்பு, மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆணையர் தெரிவித்தார்.

பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக பின்பற்றுகின்றனரா என்பதை உறுதி செய்ய, பெருநகர சென்னை மாநகராட்சியால் தொடர்ந்து சென்னை நகரம் முழுவதும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களிடமும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

01.07.2026 முதல் 23.07.2026 வரை திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ மீறிய பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியால் மொத்தம் ரூ.5,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ன் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே, அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026-ஐ முழுமையாக கடைப்பிடித்து, அபராதத்தை முழுமையாக தவிர்த்திடுமாறும், தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான சென்னையை உருவாக்குவதில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறும் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.