தமிழக செய்திகள்

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி: வீடியோ வாகனங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முந்தினம் (13.1.2025)அன்று சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடங்கிவைத்தார்கள்.

சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று(14.1.2025) முதல் 17.1.2025 வரை 4 நாட்கள் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா' கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்னணு வீடியோ வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 13.1.2025 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும், 14.1.2025 அன்றைய கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் 15.1.2015 முதல் 17.1.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் - கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் - புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் மேற்கண்ட இடங்களில் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.