கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பெற்றோர் சகோதரனை செல்லமாக கவனிக்கின்றனர்... வருத்தத்தில் 13-வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உடற்கல்வி ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

சென்னை,

பெற்றோர் தனது சகோதரனை செல்லமாக கவனித்துக்கொண்டு, தன்னை சரியாக கவனிப்பதில்லை என்ற வருத்தத்தில் பள்ளி மாணவி 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9-ம் வகுப்பு மாணவி

சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், பாலக் (14 வயது) என்ற மகளும் இருந்தார். பாலக் புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மன உளைச்சல்

இதனிடையே பெற்றோர் தனது சகோதரனை செல்லமாக கவனித்துக்கொள்வதாகவும், தன்னை சரியாக கவனிப்பதில்லை என்றும் மாணவி பாலக், தனது பள்ளி தோழிகளிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். இதனால் அவர், கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் மாணவி பாலக், அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியருக்கு குறுஞ்செய்தி

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்வதற்கு முன்பாக மாணவி பாலக், தனது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதும் தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT