கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை: தனியார் நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேலாளர் கைது

மேலாளரிடம் இருந்து சிறிய ரக கேமரா மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கழிவறையில் ரகசிய கேமரா

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்த வாஷ்பேசின் அடியில் சிறிய அளவிலான கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திடம் புகார் அளித்த அவர், வானகரம் போலீசிலும் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலாளர் கைது

அப்போது, நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த வன்னியராஜ் (38 வயது) என்பவர், சில நாட்களாக இரவு நேரங்களில் பெண்கள் கழிவறைக்குள் சென்று நீண்டநேரம் கழித்து வெளியே வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வன்னியராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சிறிய ரக கேமரா மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT