தமிழக செய்திகள்

சென்னை: எல்நினோ மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், எல்நினோ மற்றும் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான சிறப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (17.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், எல்நினோ மற்றும் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான சிறப்பு ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகைக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன் (வருவாய் (ம) நிதி), தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் (சுகாதாரம்), ஸ்வேதா சுமன் (வடக்கு வட்டாரம்), எச்.ஆர்.கௌஷிக் (மத்திய வட்டாரம்), அதாப் ரசூல் (தெற்கு வட்டாரம்) மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1320 மோட்டார் பம்புகள் தயார்

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:

வடகிழக்குப் பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவில் பரவலாக மழை பெய்தது. இதனை முன்னிட்டு இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும், களப்பணியாளர்களும் நேற்று இரவில் களப்பணியில் சிறப்பாக ஈடுபட்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மற்றும் எல் நினோவை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை நீர் மிகத் தாழ்வாக தங்குமிடங்களில் 100 ஹெச்பி மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட மோட்டார்கள் உள்ளிட்ட பல்திறன் கொண்ட மோட்டார்கள் என மொத்தம் 1320 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்விடத்திலும் மழைநீர்த் தேக்கம் இன்றி உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கும் மிகத் தாழ்வானப் பகுதிகளில் படகுகள் மற்றும் படகுகளை இயக்குபவர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

மரக்கிளைகள் அகற்றம்

இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும். மழையின் காரணமாக விழுகின்ற மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

களப்பணியாளர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்திட வேண்டும். தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவினை வழங்கிட வேண்டும். மழைநீர் வடிகால் இணைப்பில்லாத சில இடங்களில் மழைநீரை அகற்றுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதியில் தனிக் கவனம் செலுத்தி தண்ணீர் தேங்காமல் அங்கு தயார் நிலையில் உள்ள மோட்டார் பம்பு மூலம் அகற்றிட வேண்டும்.

உடனடி நடவடிக்கை

மக்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதியோர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தேவையான பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் களப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை மேற்கொண்டு மக்களை பாதுகாத்திட வேண்டும் என்று பேசினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT