சென்னை,
சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அதிகம் பயன்படுத்துவது ரெயில் போக்குவரத்தை தான். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து குறிப்பிட்ட இடத்துக்கு சரியான நேரத்தில் செல்ல உதவியாக இருப்பது மின்சார ரெயில்கள் தான். ஒரு நாள் மின் சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் சென்னையே ஸ்தம்பித்து விடும்.
இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில்கள் ஆங்கேங்கே நிறுத்தப்பட்டுள்ளன. தாம்பரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ஒரே டிராக்கில் இரண்டு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நுங்கம்பாக்கம் - சேத்துப்பட்டு - எழும்பூரில் நீண்ட நேரமாக ரெயில்கள் நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிக்னல் கோளாறு காரணமாக வேலைக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 44 ரெயில்கள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.