பாம்பு- மையூர் சாகீக்  
தமிழக செய்திகள்

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்: தாம்பரத்தில் பரபரப்பு!

பாம்பு கடித்தவுடன் பதற்றமடையாத மையூர் சாகீக், தன்னை கடித்த பாம்பை லாவகமாகப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார்.

சென்னை,

சென்னையில், தன்னை கடித்த பாம்பு என்ன வகையான பாம்பு என்பதை மருத்துவர்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக, வாலிபர் ஒருவர் கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடி

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மையூர் சாகீக் (வயது 36). அவர் இன்று (புதன்கிழமை) காலை தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மரப்பலகையின் அடியில் பதுங்கியிருந்த சிறிய பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது கையில் கடித்தது.

பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வருகை

பாம்பு கடித்தவுடன் பதற்றமடையாத மையூர் சாகீக், தன்னை கடித்த பாம்பை லாவகமாகப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்தார். பின்னர், அந்தப் பாட்டிலுடன் தாம்பரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக விரைந்தார். அவர் கையில் பாம்புடன் வருவதைப் பார்த்த சக நோயாளிகளும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் அச்சமடைந்தனர். ஆனால், மருத்துவர்களிடம் தனக்கு முறையான சிகிச்சை அளிக்க வசதியாக பாம்பு வகையைக் காட்டவே இவ்வாறு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

மருத்துவர்கள் அந்த பாம்பை ஆய்வு செய்தனர். ஆய்வில், அது விஷமில்லாத சாதாரண பாம்பு என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞருக்கு தேவையான முதலுதவி மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இச்சம்பவம் தாம்பரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT