தமிழக செய்திகள்

சென்னை திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட சாலை - டெண்டரை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு

சென்னை - உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டத்திற்கு தமிழக அரசு, 2,100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

சென்னை,

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு, 2,100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இந்த திட்டத்திற்கான மதிப்பில் 50% அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் உத்தண்டி இடையே அமைக்கப்படவுள்ள உயர்மட்டச் சாலை திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிலோ மீட்டருக்கு ரூ. 157.89 கோடி மதிப்பீட்டில் ரூ.2,100 கோடிக்கு உயர்மட்ட சாலை திட்டத்தில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

சந்தை மதிப்பை விட அதிக மதிப்பில் திட்டத்திற்கு தி.மு.க அரசு ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தை மதிப்பை விட அதிக தொகை கொடுத்து ஒப்பந்ததாரர் திட்டத்தை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிலோ மீட்டருக்கு ரூ.147 கோடி ரூபாய் என்பது தான் சந்தையில் தற்போதைய செலவீனம் என கூறப்படுவதால் டெண்டர் ரத்தாக வாய்ப்பு உள்ளது.

சென்னை மதுரவாயல் உயர்மட்ட பாலத்திட்டம் கிலோ மீட்டருக்கு ரூ.147 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் நிலையில், திருவான்மியூர்-உத்தண்டி சாலை திட்டத்திற்கு மட்டும் கிலோ மீட்டருக்கு ரூ.10.89 கோடி கூடுதலாக ரூ 157.89 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.