தமிழக செய்திகள்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் வெற்றி பெற்று அசத்திய 8 மாத கர்ப்பிணி

த.வெ.க. வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் பலர் அரசியல் பின்புலம் இல்லாதவர்களாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை த.வெ.க. பெற்றிருக்கும் இந்த வெற்றியானது, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இருபெரும் தேசிய கட்சிகளை எதிர்த்து கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றிக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் வெற்றி பெற்ற குடும்ப தலைவியும், 8 மாத கர்ப்பிணியுமான எம்.ஆர்.பல்லவி பெற்ற வெற்றி, டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளராக களம் கண்ட குடும்ப தலைவி ராக்கி பிர்லாவின் வெற்றியுடன் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

36 வயதான த.வெ.க. வேட்பாளர் எம்.ஆர்.பல்லவி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கிய சமயத்தில் எம்.ஆர்.பல்லவி அக்கட்சியில் இணைந்துள்ளார். பின்னர் கட்சி சார்பில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்த எம்.ஆர்.பல்லவி, வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும், பிரசாரத்திற்கு சென்றபோது ஒருமுறை பல்லவி மயக்கமடைந்து விட்டார் என்றும், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பிரசாரத்திற்கு சென்றார் எனவும் அவரது கணவர் கூறியுள்ளார்.

தற்போது எம்.ஆர்.பல்லவி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ள நிலையில், அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் மே 20-ந்தேதியையொட்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என டாக்டர்கள் கூறியிருப்பதாகவும், தற்போது டாக்டர்கள் அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி இருப்பதால் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை எனவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.