தமிழக செய்திகள்

ஏறுவதற்கு முன்பே புறப்பட்ட சென்னை ரெயில்; அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

பயணிகள் பலரும் ஒன்று சேர்ந்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு 8.50 மணிக்கு வந்து 8.55 மணிக்கு புறப்படும்.அந்த ரெயில் நேற்று இரவு 2 நிமிடம் காலதாமதமாக இரவு 8.52 மணிக்கு 2-வது நடைமேடையில் வந்தது. வழக்கமாக ரெயில் பெட்டிகள் அமையும் வரிசை முறை திடீரென மாற்றப்பட்டிருந்தது. அது தொடர்பாக ரெயில் நிலையத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் ஒலிபெருக்கியில் எதுவும் தெரிவிக்கப்படவும் இல்லை.

முன்பதிவு செய்த பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டி வரும் என்று எதிர்பார்த்து நின்ற இடத்திற்கு பதிலாக வேறு பெட்டிகள் இருந்தன. பெட்டிகள் அனைத்தும் மாற்றி மாற்றி இணைக்கப்பட்டிருந்தன. இதனால் பிளாட்பாரத்தில் காத்து நின்ற பயணிகள் குழப்பம் அடைந்தனர்.அவர்கள் தாங்கள் பயணிக்கும் பெட்டி எங்கே இருக்கிறது? என்பது தெரியாமல் தவித்தனர். ரெயில் 5 நிமிடமே நிற்கும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது உடமைகளை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். அப்போது சில பயணிகள் ஒருவருக்கொருவர் மோதி பிளாட்பாரத்தில் விழுந்தனர்

மேலும் பல பெட்டிகளின் கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வெளிப்புறமாக பயணிகளால் திறக்க முடியவில்லை. ஆகவே பெட்டிகளிலும் பயணிகள் ஏற முடியாமல் நின்றனர். இந்த நிலையில் அந்த ரெயில் 8.55 மணிக்கு புறப்பட்டது.

ஒரு ரெயில் வரக்கூடிய நேரத்திற்கு சரியாக வராவிட்டால், காலதாமதமாக வந்தால், வரும் நேரத்தில் இருந்து நிற்கும் நேரம் கணக்கிடப்பட்டு பின்னர் புறப்பட்டு செல்லும். பயணிகள் அனைவரும் ஏறிவிட்டார்கள் என்ற பட்சத்தில் மட்டும், சரியான நேரத்தை எட்டிவிட்டால் அந்த ரெயில் புறப்படும். ஆனால் கன்னியாகுமரி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கத்தை விட 2 நிமிடம் தாமதமாக வந்துவிட்டு சரியான நேரத்திற்கு புறப்பட்டது. பெட்டிகள் மாறியிருந்ததால் பயணிகள் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த நிலையிலும், பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாததால் ஏற முடியாமல் பயணிகள் தவித்தபடி இருந்த நிலையிலும், அனைத்து பயணிகளும் ஏறுவதற்கு முன்பாகவே ரெயில் புறப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரெயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். ஆனால் ரெயில் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து சென்றபடி இருந்தது. பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் ரெயிலில் ஏறாத நிலையில், ரெயில் புறப்பட்டதை பார்த்து ரெயிலுக்குள் இருந்த பயணி ஒருவர் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் உடனடியாக நின்றுவிட்டது.

பின்னர் பயணிகள் பலரும் ஒன்று சேர்ந்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பயணிகளுக்கு பல்வேறு அசவுகரியத்தை கொடுத்தது மட்டுமின்றி, தவிக்க வைத்த ரெயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.