தமிழக செய்திகள்

சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகையை உடைத்த மர்ம நபர்கள்

’மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ பெயர் பலகை உடைக்கப்பட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது தியாகத்தை போற்றும் வகையில் அமைதிக்கான உயரிய விருதான "அசோக் சக்ரா'வை அவரது குடும்பத்தினருக்கு வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை

இந்த நிலையில், அவர் வசித்த பகுதியான, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, 'மேஜர், முகுந்த் வரதராஜன் சாலை" என, ஜூன் மாதம், தமிழக அரசு பெயர் சூட்டியது.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி நிர்வகிக்கும் அச்சாலையில் கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப். சந்திப்பு, சோலையூர், கேம்ப் சாலை உட்பட பல இடங்களில் மேஜர் முகுந்த வரதராஜன் சாலை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.

பெயர் பலகை உடைப்பு

இதில், கேம்ப் சாலை சந்திப்பில், இடதுபுறம் உள்ள காவல் உதவி மையத்தை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை, மர்ம நபர்கள் அடியோடு பிடுங்கி சாலையோரம் வீசியுள்ளனர்.

மேலும், பலகையில் அச்சிடப்பட்டிருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்ற வாக்கியத்தையும் அட்டையை னவத்து முடியுள்ளனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;

'பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்த பெயர் பலகை இடையூறாக இருப்பதால் பிடுங்கி வீசப்பட்டிருக்கலாம். மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மறைந்த ராணுவ வீரரின் பெயர் பலகையை பிடுங்கி வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.