தமிழக செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னை பெண் பலி

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஒரு தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் நெல்லை அருகே முன்னீர்பள்ளம் பகுதியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.

நெல்லை,

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவருடைய மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சத்யா, அனிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகின்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு வந்திருந்தனர்.

அனிதா உள்ளிட்ட 4 பேர் நேற்று மதியம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.

அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனிதாவை பரிசோதனை செய்தபோது, அவர் மட்டும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார்.

SCROLL FOR NEXT