சென்னை,
சென்னை கொடுங்கையூரில் சித்தியின் வீட்டிலேயே மகள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் ஆர்.வி. நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. அவருடைய அக்கா ஸ்ரீதேவி கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் மகள் பெமினா தனது சித்தி சுந்தரியுடன் வசித்து வந்தார். பெமினா வழக்கறிஞராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சுந்தரி வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு நகைகள் திருடு போயுள்ளன.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், பெமினாவின் வழக்கறிஞர் தோழி சில தினங்களுக்கு முன்பு சுந்தரி வீட்டிற்கு வந்தார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பெமினாவின் தோழியை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சில தினங்களுக்கு முன்பு அவர் நகையை அடமானம் வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பெமினா சுந்தரியின் வீட்டில் இருந்து 19 சவரன் நகையை திருடி தன்னிடம் கொடுத்ததாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர், போலீசார் பெமினாவின் தோழியை கைது செய்து அவரிடம் இருந்து 3 சவரன் நகையை மீட்டு கொடுத்தனர். மேலும், நகையை திருடி தலைமறைவாக உள்ள பெமினாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.