சென்னை
சென்னையில் யூ டியூபர் ஹரீஷ் தற்கொலை செய்தது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 27). பைனான்ஸ் வித் ஹரீஷ் என பரவலாக அறியப்படும் இவர், சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களை வெளியிட்டு வந்துள்ளார். இணையதளம் வழியே நிதி சார்ந்த தகவல்களை வீடியோக்களாக வழங்கி வந்துள்ளார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூபில் 13 லட்சம் பேர் பின்தொடர்வோராக உள்ளனர். இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்றை குறிப்பிட்டு, அதன் நிதி சார்ந்த தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி ஜேசன் சாமுவேல் என்பவர் கேள்வி எழுப்பினார். செபி நிறுவனத்தின் பதிவு பெற்ற உரிமம் இல்லை என்றும் பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஹரீஷின் இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-டியூப் சேனல்களை மெட்டா நிறுவனம் தடை செய்தன. ஆனால் ஹரீஷ் சோர்ந்து போகாமல், வேறு பெயர்களில் கணக்குகளை தொடங்கி மீண்டும் வீடியோக்களை வெளியிட்டார். அவற்றின் மீதும் கடுமையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஹரீஷ், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த கானாத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில், சாமுவேலுக்கு எதிராக கானாத்தூர் போலீசில், ஹரீஷின் தந்தை விநாயகம் புகார் அளித்துள்ளார். மிரட்டல் முயற்சிகள், மனதளவில் துன்புறுத்துதல் போன்றவற்றால், ஹரீஷ் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக ஹரீஷ் வெளியிட்ட வீடியோவில் பேசும்போது, இது 5 வருட உழைப்பு. தவறுகள் எதுவும் இருப்பின், நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். அதற்கு நான் பதில் கூற முடியும். ஆனால், என்னுடைய 5 ஆண்டு உழைப்பு திருடப்பட்டு உள்ளது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.