சென்னை,
சென்னை மாநகராட்சியின் நிர்வாகம், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து வங்காளதேச அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
இன்று மாநகராட்சி ஆணையாளர் சமீரன், தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் நிர்வாகம், நிதி திட்டமிடல் மற்றும் சேவை வழங்கல், புவியியல் தகவல் அமைப்பு மையம் (GIS) மற்றும் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு (RTFF) குறித்து வங்காளதேசம் (Bangladesh) அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், மின்சாரப் பேருந்துகள் திட்டத்தில் பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் மின் பேருந்துகளுக்கான மின்னேற்றம் செய்யும் நடவடிக்கைகள், பொது தனியார் பங்களிப்பு முறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டனர்.
தொடர்ச்சியாக, சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிருவாக மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை வருவாய் நிருவாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன், முன்னிலையில், வங்கதேச அலுவலர்கள் குழுவினர் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள முன்னறிவிப்பு அமைப்புகள் மற்றும் பேரிடர் கால மேலாண்மை குறித்து கேட்டறிந்தனர். பின்னர், முழுமையான சாலைகள் திட்டத்தில் காதர் நவாஸ்கான் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தினைப் (Pedestrian Plaza) பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் வங்காளதேச நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத் துறை இணைச் செயலாளர் பரிமல் சர்க்கார் (Mr. Parimal Sarker - Joint Secretary, Local Government Division), நகராட்சி மேம்பாட்டு நிதியம் நிர்வாக இயக்குநர் முகமது கலிலுர் ரஹ்மான் (Ms. Khalilur Rahman - Managing Director, Bangladesh Municipal Development Fund (Joint Secretary, LGD), உலக வங்கியின் பணிக் குழுத் தலைவர் மான்ஷா சென் (Ms. Mansha Chen, Task Team Leader, World Bank) உள்ளிட்ட அலுவலர் குழுவினர், இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், துணை ஆணையாளர்கள் சித்ரா விஜயன், (வருவாய் (ம) நிதி), தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், (சுகாதாரம்), வங்காளதேச நாட்டின் அலுவலர் குழுவினர், மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.