தமிழக செய்திகள்

சுற்றுலாத்துறை சார்பில், இன்று ஏற்காட்டில் சிக்கன் பிரியாணி திருவிழா

மதியம் 12.30 முதல் ரூ.99-க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும்.

சேலம்,

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காட்டில் இன்று சிக்கன் பிரியாணி திருவிழா நடக்கிறது. ரூ.99-க்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கொல்லிமலை, கன்னியாகுமரி, வண்டலூர் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு வாரவிடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டல்களிலும், அமுதம் உணவகங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

பிரியாணி திருவிழா

இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் புதிய முயற்சியாக கடந்த 5-ந் தேதி சுற்றுலா தலங்களில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டல்கள், அமுதம் உணவகங்கள், படகு இல்லங்கள் என 21 இடங்களில் குறைந்த விலைக்கு அதாவது ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப் பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து சுற்றுலா தலங்களிலும் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி (பார்சல்) வழங்கும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலிவு விலை சிக்கன் பிரியாணி

அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம் முன்பு ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி திருவிழா (பார்சல் மட்டும்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 12.30 முதல் ரூ.99-க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும். முதலில் வரும் 100 பேருக்கு மட்டும் பிரியாணி வழங்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு மலிவு விலையில் தரமான சிக்கன் பிரியாணி கிடைக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு இன்று வரும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.