தமிழக செய்திகள்

பறவை காய்ச்சல் பாதித்த பகுதியில் இருந்து சென்னைக்கு கோழிகள் அனுப்பி வைப்பு - அதிகாரிகள் தீவிர விசாரணை

கோழிகள் சென்னையில் விற்பனையாகிவிட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறவை காய்ச்சல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழிகள் அழிப்பு

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு பகுதியில் இருந்து போபாலுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று வந்தன. அதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு 25,000 கோழிகள் நொச்சிக்காடு பகுதியில் அழிக்கப்பட்டன.

இருந்தாலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி உள்ள பண்ணைகளில் இருந்து கோழிகள் விற்பனை செய்யக்கூடாது என்றும், அவை அனைத்தையும் அழித்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கால்நடை துறையினர் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் சோதனை

இந்நிலையில், இந்த பகுதியில் ஒரு பண்ணையில் இருந்து இன்று காலை லாரி மூலம் கோழிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று சோதனை செய்தனர்.

5 லாரிகளில் கோழிகள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றில் 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்ற 2 லாரிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னைக்கு அனுப்பப்பட்ட கோழிகள்

மேலும் இந்த விசாரணையின்போது கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இதேபோல் பண்ணையில் இருந்து சென்னைக்கு சுமார் 8 ஆயிரம் கோழிகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கால்நடைத்துறை அதிகாரிகள், தற்போது சென்னையில் இந்த கோழிகள் விற்பனையாகிவிட்டதா? அல்லது வேறு எங்கும் வைக்கப்பட்டிருக்கிறதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த கோழிகள் சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT