சென்னை,
ஒவ்வொரு வழக்கும் பொறுப்புடனும், நேர்மையுடனும் கையாளப்பட வேண்டும் என்று திருச்சியில் நடந்த போக்சோ சிறப்பு கோர்ட்டு திறப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந் தர்மாதிகாரி பேசினார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரணை செய்வதற்கான சிறப்பு கோர்ட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந் தர்மாதிகாரி சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக போக்சோ சிறப்பு கோர்ட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான சூழலில் வளரவும், கற்கவும், விளையாடவும், அச்சமின்றி வாழவும் உரிமையைப் பெற்றுள்ளது. குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அதன் பாதிப்பு ஆழமானதாகவும், நீண்டகாலம் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் நமது அணுகுமுறை விரைவானதாகவும், கருணையுடனும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.
நீதி என்பது இறுதியாக வழங்கப்படும் தீர்ப்பில் மட்டுமல்ல. அந்தத் தீர்ப்பை நோக்கிய பயணத்தில் மக்களை நடத்தும் விதத்திலும் அடங்கியுள்ளது. எனவே, ஒவ்வொரு வழக்கும் பொறுப்புடனும், நேர்மையுடனும் கையாளப்பட வேண்டும். ஒவ்வொரு தீர்ப்பும் சட்டத்தின் அடிப்படையில் அமையட்டும். இவ்வாறு அவர் கூறினார்.