தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், குடி அரசு இதழின் முழு தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாம் போலி சாமியார்களை பார்த்திருப்போம். ஆனால், ஒரு போலி பெரியாரியவாதியையும், முதலமைச்சரையும் பார்த்திருக்கிறீர்களா?
தேர்வில் நாம் படிக்கும்போது சில கடினமான கேள்விகளை தவிர்த்துவிடுவோம். அதுபோல், பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துக் கொண்டு அவரின் சில கொள்கைகளை சாய்ஸில் விட்டுவிடுவார் நமது முதலமைச்சர். செஞ்சி சிறுமி மாயமாகி சுமார் 40 நாட்கள் கடந்துவிட்டது.அந்தச் சிறுமியின் தாய், குடும்பத்தினர், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தவித்துவருகின்றனர். சிறுமியை தேடி கண்டுபிடிக்க வேண்டியதுதான் காவல்துறையின் வேலை. அதனைத்தான் பல்வேறு தரப்பினரும் கேட்டு வருகிறோம். ஆனால், காவல்துறைக்கு பொறுப்பேற்று இருக்கக்கூடிய முதலமைச்சர் இந்தச் சம்பவம் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
ஆனால், சிறுமியை தேட வேண்டிய காவல்துறை இறுதியாக காவல்நிலையத்தில் யாகம் நடத்திவருகிறது. இவர்தான் பெரியாரிஸ்ட். வெறும் ஜோசியம், ஜாதகம், யாகம் என்றுதான் இந்த ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சர் எந்த ஊருக்குச் சென்றாலும், முதலில் அங்கிருக்கும் கோயிலுக்குச் செல்வதுதான் முதல்வரின் முதல் வேலை. அதன்பிறகுதான் வேறு பணிகள்.நாம் போலி சாமியார்களை பார்த்திருப்போம். ஆனால், ஒரு போலி பெரியாரியவாதியையும், முதலமைச்சரையும் பார்த்திருக்கிறீர்களா?” இவ்வாறு அவர் கூறினார்.