சென்னை,
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். இதுதவிர தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேர் எழுதுகிறார்கள். அந்தவகையில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுத உள்ளனர். மேலும் சிறைத்தேர்வர்களாக 281 பேரும் எழுத இருக்கிறார்கள்.
முதல் தேர்வாக நாளை தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 5-ந்தேதி (வியாழக்கிழமை) ஆங்கில தேர்வும், அதன்பிறகு ஒவ்வொரு பாடங்களுக்கான தேர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் நடக்க உள்ளது.பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறது.
நாளை தொடங்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள். இதற்கான தேர்வு முடிவு மே 8-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே பொதுத்தேர்வு அட்ட வணை வெளியிடும்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள். பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.