தமிழக செய்திகள்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் முடிவுபெற்றநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் சுமார் 4.5 ஏக்கரில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி பூமிபூஜை பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அன்று முதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் 2 அரங்குகளாக அமைக்கப்பட்டும், அகழாய்வு தளங்கள் கண்ணாடி தளமாக மாற்றப்பட்டும் உள்ளன. திறந்த வெளி அருங்காட்சியகத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம்தென்னரசு, பெரியகருப்பன், ஆகியோர் அடிக்கடி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் முடிவுபெற்று இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தநிலையில், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியம் முன் அலங்காரத் தோரண வாயிலும், அருங்காட்சியகத்தை பாா்வையிட வரும் பார்வையாளர்கள் நின்று செல்பி எடுத்துக் கொள்ள ‘கீழடி நம் தாய்மடி’ என்ற வாசகத்துடன் தென்னை மரத்துடன் கூடிய செல்பி மையமும் தொல்லியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.