தமிழக செய்திகள்

9,801 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

“தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியை முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.2.2026) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். மேலும், சென்னை, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 குடியிருப்புகளை திறந்து வைத்து, சென்னை, செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, அரசு அலுவலர்கள் முன்னணி நிறுவனங்கள் வாயிலாக இணையவழியில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட “திறன் 3600” என்ற இணையதளத்தையும், அனைத்து தேர்வு முகமைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளை கைபேசி வழியாக அறியும் வண்ணம் “தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியையும் தொடங்கி வைத்தார்.

அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளில் பணிநியமன ஆணைகள்

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு இளைஞர்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும் என்பதைத் தனது முழு முதற் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 45,126 நபர்கள், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (USRB) வாயிலாக 24,927 நபர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வாயிலாக 12,894 நபர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) வாயிலாக 11,244 நபர்கள், என தெரிவு முகமைகள் வாயிலாக மொத்தம் 94,191 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மேற்படி தெரிவு முகமைகள் தவிர்த்து, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறை நிறுவனங்கள் / வாரியங்களில் நேரடி நியமனம் வாயிலாக, பல்வேறு அரசுத்துறைகளில் 54,864 நபர்களுக்கும், அரசுப்பணியில் பணிபுரிந்து உயிர்நீத்த அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 5,899 நபர்களுக்கும் மற்றும் சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 177 நபர்களுக்கும், என மொத்தம் 1,55,131 நபர்களுக்கு அரசுப்பணியில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு, 12,16,412 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளதன் மூலம், 36,43,768 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை இவ்வரசு உருவாக்கியுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், (TNPSC) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், (TNUSRB) ஆசிரியர் தேர்வு வாரியம், (TRB) தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக 38 மாவட்டங்களிலும் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, இதுவரை 1,563 தேர்வர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தின் தொழில் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்பட்ட 2,474 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 3,07,345 இளைஞர்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக இதுவரையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு 48,65,050 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தம் 65,69,020 இளைஞர்களுக்கு தொழில்முனைவுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அரசின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப்பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாட்டின் அனைத்து தெரிவு முகமைகள் மற்றும் வாரியங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்று தரும் பணிகள் தமிழ்நாடு அரசால் தொடர்ந்து செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 நபர்களில் இருந்து 4213 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய விழாவில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 24.04.2025 அன்று சட்டமன்றப் பேரவையில் "குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகக்கூடிய மாணவர்களுக்கு சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.

அதன்படி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகக் கூடிய தேர்வர்களுக்கு சென்னை, செனாய் நகரில் ரூபாய் 62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், போட்டித் தேர்வர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்கள்.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் உள்ள பயிற்சித்துறையின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கென அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையமானது சென்னையிலுள்ள பசுமை வழிச்சாலையில் செயல்பட்டு வருகின்றது. அதன்மூலம் ஆண்டு தோறும் 225 இளைஞர்கள் குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சியினைப் பெற்று வருகிறார்கள். அத்துடன், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி மையத்திலும் ஆண்டுக்கு தலா 100 இளைஞர்கள் குடிமைப் பணிக்கான பயிற்சியினைப் பெற்று வருகின்றனர். தற்போது புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் பயன்பாட்டிற்கு வரும்போது மேலும் இளைஞர்கள் பயன்பெறுவர். அதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான தமிழக இளைஞர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வு பெற்று செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திறன் 3600 - திறன் பயிற்சி – நிர்வாக வளர்ச்சி - அரசு அலுவலர்களுக்கு இணைய வழியில் செயற்கை நுண்ணறிவு (AI), தரவுப் பகுப்பாய்வு (Data analysis) உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க புதிய வலைவாசல் (Web portal) அறிமுகம்.

அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், முன்னணி கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்களுடைய விருப்பத்தின் பெயரில் கட்டணமின்றிப் பயின்றிட, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக சான்றிதழ் பெறக்கூடிய செயற்கை நுண்ணறிவு (Artificial Inteligence), தரவு பகுப்பாய்வு (Data Analysis), திட்ட மேலாண்மை (Project Management), தொடர்பாடல் (Communication Skill), திறன்கள் உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கும் “திறன் 3600” வலைவாசலை (Web Portal) தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

அரசு அலுவலர்கள் தங்களின் அறிவையும் திறன்களையும் காலத்திற்கேற்ப தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும், அரசின் நிர்வாகம் நவீனமாகவும், மக்கள் மையமாகவும், திறமையானதாகவும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையின் அடையாளமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு அலுவலர்கள், தங்களின் திறனை வளர்த்துக் கொண்டு அதன் மூலம் சிறப்பாகவும், சீறிய முறையிலும் அரசின் நிர்வாகத்தில் வளர்ச்சியைக் கொண்டு வருவதும் உறுதி செய்யப்படுகிறது.

“தேர்வுக்களம்” – ஒருங்கிணைக்கப்பட்ட கைபேசி செயலியை தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (USRB), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MSRB) போன்ற தேர்வு முகமைகள் மூலம் செய்யப்படும் “பணியாளர்கள் தேர்வுகள்” தொடர்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள “தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

இச்செயலிமூலம் அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள், ஆன்லைன் வழியே விண்ணப்பித்தல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள், செய்தி வெளியீடுகள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள், முந்தைய போட்டித் தேர்வுகளின் விடைகளுடன் கூடிய வினாத்தாள்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

மேலும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளின் காணொலிகள் மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் உள்ளிட்ட செய்தித்தாள்களில் அளிக்கப்படும் அறிவிப்புகள் ஆகியவைகளை இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன், குறித்த நேரத்தில், நுழைவுச்சீட்டுகள், தேர்வுமுடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நேரடியாக ஆர்வலர்களின் கைபேசிக்கு உடனடியாக அறிவிக்கப்படும் வண்ணம் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தத் தகவலும் தவறவிடப்படாமல் தேர்வர்கள் சிறப்பாகவும், திறமையாகவும் தேர்வுக்கான தயாரிப்பை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியும்.

எனவே, பல செயலிகள், பல வலைத்தளங்கள், பல உள்நுழைவுகள் போன்ற சிக்கலான பயன்பாட்டினை குறைத்து, ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் பெறும் வசதியை “தேர்வுக்களம்” செயலி வழங்குகிறது. ஆர்வலர்கள் Play Store அல்லது App Store மூலம் தேர்வுக்களம் செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து, உள்நுழைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான நடைமுறையாகிவிடும்.

இவ்விழாவில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.சந்திரமோகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.