சிவகங்கை,
உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு தள்ளி வைக்காமல் உடனடியாக நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.சிவகங்கை மாவட்டத்தில் தற்பொழுது வன்முறை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. எனவே அரசும் போலீசாரும் கூடுதல் கவனம் செலுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்களுக்கு வேலையில்லா திண்டாட்டமும் காரணமாக உள்ளது .எனவே சிறு தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் விளையாட்டிலும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் .மாவட்டத்தில் பன்றி மற்றும் மான் தொல்லைகள் அதிகமாக உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே வனத்துறையினர் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதிவு துறையை தனியார் மயமாக்க முயற்சி செய்வதை அரசு கைவிட வேண்டும். கோரிக்கை வைத்துள்ளவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் முழுக்க முழுக்க தமிழக உரிமை சார்ந்த கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏழை எளிய மக்கள் கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் இவர்கள் நலன் சார்ந்த கூட்டறிக்கை அந்த அறிக்கை. ஏராளமான கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது இது அணை பிரச்சனை அல்ல தேசத்தின் ஒருமைப்பாட்டு பிரச்சனை.
புத்தக ஊழல் குறித்த வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். பெண்கள் மீதான பாலியல் சீண்டல் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையை முடுக்கி விட வேண்டும்தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்பதற்காக ஆளுநரை டெல்லி அழைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்பது உண்மை. சட்டம் ஒழுங்குக்கு கூடுதல் கவனம் செலுத்தி காவல்துறையை முடுக்கி விட்டு உளவுத்துறை முடுக்கிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் இந்த காரணங்களுக்காக ஆளுநரை பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அழைத்திருந்தால் அவர் முதலில் அழைக்க வேண்டிய இடம் உத்தரபிரதேசம் தான்.இந்தியாவிலேயே அங்கு தான் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது.தமிழ்நாட்டில் குற்றச்செயல் உள்ளது அதை தடுக்க வேண்டும் ஒடுக்க வேண்டும். அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் என்பதை ஆளுநர் நமதுபிரதமருக்கு சொல்ல வேண்டும்.இங்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதற்காக இது சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன மாநிலம் போன்ற ஒரு பிம்பத்தை ஆளுநரும் உள்துறை அமைச்சரும் உருவாக்கி விடக்கூடாது.
இந்த அரசுக்கு நாங்கள் கொடுத்துள்ள ஆதரவு சமூக விரோத செயலுக்கோ சமூக பதட்டத்திற்கோ அல்ல நாங்கள் கொடுத்த ஆதரவு மக்களின் தீர்ப்புக்கு அளித்த மரியாதை. காலதாமதம் செய்து ஆளுநர் மக்கள் அதிகாரத்தில் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக அளித்த ஆதரவு.சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு எந்த சமரசமும் கிடையாது காவல்துறை முடுக்கி விடப்பட வேண்டும் அரசு களப்பணியாற்ற வேண்டும்.முதல்வர் காவல்துறைக்கு பொறுப்பேற்பதால் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இந்த அரசு ஆறு மாதங்கள் கொண்ட புதிய அரசு இதை திமுக அதிமுகவுடன் ஒப்பிட முடியாது” என்று தெரிவித்தார்.