தமிழக செய்திகள்

தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவதை ராசியாக கருதுகிறார். அதன்படி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தான் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியிலும், முன்னாள் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் போட்டியிட்டு வெற்றி பெற்ற மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ரங்கசாமி வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை புதுவை சட்டசபை செயலாளர் தயாளனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளதால் விரைவில் அத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.