தமிழக செய்திகள்

கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

கத்தாரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளர்.

சென்னை,

கத்தாரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

வருத்தமும், வேதனையும் அடைந்தேன்

கத்தார் நாட்டில் ராஸ் லபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தை சேர்ந்த தங்கராஜா மகன் பபித் (வயது 26), பணகுடி பகுதி சிவகாமிபுரத்தை சேர்ந்த முத்துராஜா மகன் சஜித்குமார் (25), மற்றும் அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த மைக்கேல் மகன் சுவின் (24) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

துரித நடவடிக்கை

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசுவை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

ஆழ்ந்த இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

உதவி எண்கள்

மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் உதவி எண்கள்+91 1800 309 3793 வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.