தமிழக செய்திகள்

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் - என்ன காரணம்?

கோட்-சூட் என்பது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் சீருடையாகவே மாறிவிட்டது.

சென்னை,

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்-சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார். இதனால், கோட்-சூட் என்பது முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் சீருடையாகவே மாறிவிட்டது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், வித்தியாசமான உடையில் வந்திருந்தார். இதனால், அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் அவரை ஆச்சரியமாக பார்த்தனர். அதாவது, எப்போதும் கோட்-சூட்டில் வரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று பட்டு வேட்டி - சட்டையில் வந்திருந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது, அவருடைய நீண்ட நாள் நண்பரின் வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால், அங்கு அணிந்து சென்ற பட்டு வேட்டி-சட்டையில் அப்படியே தலைமைச் செயலகத்துக்கு வந்து தனது அன்றாட பணிகளை அவர் பார்க்கத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, மதிய உணவையும் உடன் எடுத்துவந்துள்ளார்.