முதல் அமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து பேசும் முதல் அமைச்சர் விஜய்?

தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது முதல்-அமைச்சர் விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. துணை சபாநாயகர் விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் குறித்து ஆபாச செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் உள்ளிட்டவையால் தவெக எதிர்க்கட்சிகளிடம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு

இந்தச் சூழலில்தான் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சித் தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்களைத் தொடர்புகொண்ட கட்சித் தலைமை, அனைவரும் உடனடியாகச் சென்னைக்குத் திரும்புவதுடன், கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவே சென்னைக்கு வந்துள்ளனர்.

பங்கேற்காத எம்.எல்.ஏக்கள்

இன்று காலை 11 மணிக்குக் கூட்டம் தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மாமல்லபுரம் ஓட்டலுக்கு வருகை தந்தனர். மருத்துவ சிகிச்சையில் உள்ள விஎஸ் பாபு, சபாநாயகராக உள்ள ஜேசிடி பிரபாகர், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா மற்றும் சில அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனித்தனியே அறிவுரை

எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாகச் சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 மாதங்களில் தொகுதியில் செய்த திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்ததாகவும், சில அறிவுரைகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாராக இருந்தாலும் நடவடிக்கை

முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த ஆலோசனையின்போது, தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாகவும், எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT