தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம்

ஆதிதிராவிடர் நலத்திட்டத்திற்காக 5,903.51 கோடி ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட மாநில மன்றக்கூட்டம் நடைபெற்றது.

மாநில மன்றம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்ய மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் (தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024) 29.05.2024 அன்று இயற்றப்பட்டது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதி முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணித்திட தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டது.

வெற்றி தமிழகம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் என்ற அரசின் "வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு திட்டத்தின்படி, அம்மாநில மன்றத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நலத்திட்டங்கள்

2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு மதிப்பீட்டில் அரசின் 23 துறைகள் மூலம் 48 துறைத் தலைமையகத்தால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆதிதிராவிடர் நலத்திட்டத்திற்காக 5,903.51 கோடி ரூபாய் செலவினமும், பழங்குடியினர் நலத்திட்டத்தற்காக 349 கோடி ரூபாய் செலவினமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பயனாளிகளின் விவரம், பயன்படுத்தப்பட்ட தொகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

செயல்திட்டத்திற்கு ஒப்புதல்

நிதியாண்டிற்கான இம்மாநில மன்ற கூட்டத்தில், 2026-27ஆம் மேம்பாட்டு செயல்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது அவர்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், திட்டத்தின் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணித்திட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

வளர்ச்சி செயல் திட்டம்

மற்றும் பழங்குடியினரின் ஆதிதிராவிடர் செயல்திட்டத்தின்கீழ், குறித்தொதுக்கப்பட்ட நிதியை மேம்பாட்டுச் செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திர செலவின விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளர்களின் விவரம் போன்றவற்றை வளர்ச்சி செயல் திட்டம் (Development Action Plan) வலைதளத்தில் என்ற (https://www.adtwdap.tn.gov.in) தவறாமல் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

உரிய பரிந்துரைகள்

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை களைந்திட உரிய பரிந்துரைகளை தெரிவிக்கவும், அதற்குரிய திட்டங்களை விரைந்து தீட்டவும் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தப்பட்டது.

அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இம்மாநில மன்றக் கூட்டத்தில், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் த. லதா, க. மாரிமுத்து, பொ. சந்திரசேகர், வி.பி. தமிழ்ச்செல்வி, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ. சித்திக், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தியா வேணுகோபால் சர்மா, சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன், மாநில மன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.ஏ. ரமேஷ்நாதன், டி. நவநீத சிவக்குமார், ம. ஷோபா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.