சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் “தடையற்ற மின்சாரம் - மின்கட்டமைப்பு - நுகர்வோர் சேவை“ குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு வருகைதந்து, மின் விநியோகம் மற்றும் மின் கட்டுப்பாடு தொடர்பான முக்கிய மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் தற்போதைய மின் தேவை மற்றும் மின் உற்பத்தி நிலவரம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி ஆதாரங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு, மின் தேவை மற்றும் மின் கிடைப்புத் திறனுக்கிடையேயான இடைவெளி, தொடர்ந்து அதிகரித்துவரும் மின் தேவையின் வளர்ச்சி ஆகியவை குறித்து ஆய்வின்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிகரித்துவரும் மின் தேவையின் தாக்கம், மின்சாரப் பரிமாற்றச் சந்தையில் இருந்து தேவையான அளவு மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் ஏற்படும் சவால்கள், அதிக செலவினம் ஏற்படுத்தும் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி, மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத மின் உற்பத்தித் தடைகள் உள்ளிட்ட மின் கிடைப்பில் ஏற்படும் சவால்கள் குறித்தும் இந்த ஆய்வின்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், 2027-ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய மின் தேவையை முன்கூட்டியே கணித்து, அதனைப் பூர்த்திசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான விரிவான செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாநிலத்தின் மின் விநியோக அமைப்பில் நிலவும் முக்கிய சவால்களான பழமையான மின் கட்டமைப்புகள் மற்றும் உபகரணங்கள், முக்கிய மின் தடைகள் மற்றும் பழுதுகள், அதிகரித்துவரும் மின் சுமையால் ஏற்படும் வலையமைப்பு நெரிசல், மின் விநியோகத் தரத்தைப் பாதிக்கும் காரணிகள், மழை, புயல், காற்று உள்ளிட்ட இயற்கைக் காரணிகளால் ஏற்படும் மின் தடைகள், களப்பணியாளர்களின் பற்றாக்குறை போன்றவை குறித்தும் விரிவாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
இச்சவால்களை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள், கூடுதல் மின்மாற்றிகள் மற்றும் புதிய மின் பாதைகள் அமைத்தல், அதிக சுமையுள்ள மின் வலையமைப்புகளை மேம்படுத்துதல், பழைய உபகரணங்களை மாற்றுதல், மின் தடைகளை விரைந்து சரிசெய்யும் வகையில் களப்பணிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள் விளக்கினர்.
மேலும், பொதுமக்களுக்குத் தடையற்ற, தரமான மற்றும் நம்பகமான மின்சார சேவையை வழங்குவதுடன், மின் நுகர்வோர் சேவையை மேலும் மேம்படுத்துதல், புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல், சேவை மையங்களின் செயல்திறனை அதிகரித்தல், நுகர்வோர் சார்ந்த சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாட்டிற்கான எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின்பளு பகிர்வு மையத்தைப் (State Load Despatch Centre – SLDC) பார்வையிட்டு, மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை மற்றும் மின் விநியோகத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, மின் சுமையைச் சமநிலைப்படுத்தும் பணிகள் குறித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.
மேலும், சென்னை மின் விநியோகக் கண்காணிப்புக் கட்டுப்பாடு மற்றும் தரவு சேகரிப்பு மையத்தை (Chennai Distribution Supervisory Control and Data Acquisition – SCADA Control Centre) மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் பார்வையிட்டபோது, சென்னை மாநகரில் மின் விநியோக நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், மின் சுமை மேலாண்மை, மின் தடங்கல்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட SCADA மையத்தின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்கும், அவற்றை உரிய அலுவலர்களிடம் உடனடியாகத் தெரிவித்துத் தீர்வுகாண்பதற்கும் 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் மின்னகம் (Minnagam) நுகர்வோர் சேவை மையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகள், அவற்றின் பதிவு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்புதல், புகார்களின் நிலையைக் கண்காணித்தல் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் விளக்கினர்.
பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும், மின்தடை, சீரற்ற மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து புகார்கள் பெறப்படும் நிலையில்
அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டுமென்றும், மின்சார விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காண வேண்டுமென்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் மின்சார வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஒன்றிய அரசின் மானியத்துடன், தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 3 கிலோவாட் வரை ரூ.1 இலட்சம் வரையிலான கூடுதல் மானியத் திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை (Roof top Solar) நிறுவிப் பயன்பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும், மின் சேமிப்பு மற்றும் மின் தேவையைச் சீராக நிர்வகிக்க BESS (Battery Energy Storage System) கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் பயன்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு (SCADA) அமைப்பை விரிவுபடுத்தி மின் விநியோகத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்திட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், நடைபெற்றுவரும் மின் உற்பத்தித் திட்டங்களை உரிய காலக்கெடுவில் நிறைவேற்றுவதுடன், சொந்த மின் உற்பத்தித் திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம், வலுவான மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டை மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் திரு. அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு. ம. கோவிந்தராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் திருமதி ஐ.சா. மெர்சி ரம்யா, இ.ஆ.ப. மற்றும் துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.