தமிழக செய்திகள்

காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மநில காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் இணைந்தது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

செல்வபெருந்தகையும் தன்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தர். இந்த நிலையில், மாணிக்கம் தாகூரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

விருதுநகர் தொகுதி எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர், தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று குரல் கொடுத்து வந்தார். மேலும் தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். தற்போது த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.