சென்னை
தமிழக முதல்-அமைச்சர் விஜய், குழந்தைகள் தின விழாவை நெல்லை, அம்பாசமுத்திரத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ள கேக்குகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அக்டோபர் 26-ந்தேதி முதல் நிறுவனங்களின் வளாகத்தில் தரத்தை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்கிறது. அதில், ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதுகுறித்து தலைமை அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படும். இந்த கேக்குகள் அனைத்தும் 45 கிராம் எடையுடன், நல்ல தரமான முறையில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள் தின விழாவை கொண்டாட உள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இதே போல பயணம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதன்படி, நவம்பர் முதல் வாரத்தில் பெருந்துறை மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கு செல்கிறார். இதில், விராலிமலைக்கு 2-ந்தேதியும், பெருந்துறைக்கு 3-ந்தேதியும் அவர் செல்கிறார். 14-ந்தேதி அம்பாசமுத்திரத்திற்கு செல்கிறார். அப்போது, குழந்தைகள் தின விழாவிலும் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.