சென்னை,
வேளாண்மை-உழவர் நலத் துறைக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 69 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி, தேசிய அளவில் விருதுகள் பெற்ற நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் செயல்படுத்திவரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணைகளை இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
2024-2025ஆம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், 2024-2025ஆம் ஆண்டிற்கான சமூகப் பொறுப்பிற்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த செயல்திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், தமிழ்நாடு முதலமைச்சரிடம் விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்வில், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், தலைமைச் செயலாளர் சாய்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத் துறை செயலாளர் வெங்கடேஷ், சர்க்கரைத் துறை ஆணையர் கண்ணன், வேளாண்மை இயக்குநர் முரளீதரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் விஜயா ராணி, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குநர் அருண்ராஜ், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் பிரியா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் மணிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.